நண்பர் ஒருவர் பேச்சுவாக்கில், “நான் ரைட் ஆப் சென்டர்,” என்று சொன்னார்.
“மற்றவர் உரிமைகளை நிராகரிப்பது, சமூக ஏற்றத்தாழ்வுகளை பேசக்கூடாது என்று சொல்வது, சும்மா விட்டால் மார்க்கெட் வேண்டிய மாஜிக் செய்யும் என்று நம்புவது, இதைத் தவிர ரைட்டில் என்ன இருக்கிறது? அதைக் கூச்சமில்லாமல் சொல்லிக் கொள்ளும் அளவு ஓவர்டன் விண்டோ நகர்ந்து விட்டதா?” என்று கேட்க நினைத்தேன்.
அப்புறம் என்னை அது ஃபார் லெஃப்ட் என்று அடையாளம் காட்டி விடும் என்பதால், “அதனாலென்ன,” என்று ஏற்று கொண்டு விட்டேன்.
எதற்கு சொல்கிறேன் என்றால் இன்றுள்ள நிலையில் ரைட் என்று சொல்லிக் கொள்வது அவ்வளவு நல்ல விஷயமல்ல. அதைக்கூட அறியாமலிருப்பது காலம் எப்படி மாறி விட்டது என்பதை காட்டுகிறது.
-
-
வாழ்க்கை குழப்பமாக இருக்கிறது என்றால் யாரையும் குறை சொல்ல முடியாது. எதையாவது செய்ய வேண்டும் என்ற வேகம் இருக்கிறது, ஆனால் கவனம் பல திசைகளில் சிதறுவதால் எதையும் ஒழுங்காக செய்ய முடியவில்லை.
இதோ இப்போது இதை அப்சிடியன் என்ற ஆப்பில் டைப் செய்து கொண்டிருக்கிறேன். எழுதி முடித்ததும் ஒரு ஷேர் பட்டனைத் தட்டி பதிவேற்றி விடலாம். இணையத்துக்கு வெளியே என் மொபைலிலும் இது ஒரு கோப்பாக இருந்து கொண்டிருக்கும்.
எப்படியும் அதையும் இதையும் இரண்டையும் ஒரு நாள் டெலிட் செய்து விடப் போகிறேன். அப்புறம் எதற்கு? இது ஒரு நல்ல நடைமுறை என்று தோன்றுகிறது.
அப்சிடியனில் கூட ஒரு குழப்பம் இருக்கிறது. ஒன்று, போல்டர், பைல் என்ற அமைப்பில் எழுதுவதை தொகுத்துக் கொள்ளலாம். அல்லது, ஹாஷ்டாக், பிராபர்டி என்று எழுதி கொரி அடிப்படையில் தொகுத்துக் கொள்ளலாம். ஆரம்பத்தில் முதல் நடைமுறை, அப்புறம் மூளைச் செலவை யோசித்து இரண்டாம் நடைமுறை. அது டேட்டாவ்யூ என்ற ப்ளக்-இன்னைச் சார்ந்திருப்பது சரியில்லை என்று இப்போது இரண்டும் கலந்த நடைமுறைக்கு மாறி விட்டேன்.
இது போதாது என்று விம், இமாக்ஸ் போன்ற இந்தப் பிறவியில் சாத்தியப்பட வாய்ப்பில்லாத விஷயங்கள் வேறு, “வா வா,” என்று கவர்ச்சி காட்டிக் கொண்டிருக்கின்றன. -
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இப்போதே இந்த ஆண்டு நினைத்தது போல் துவங்கவில்லை, இருந்தாலும் எல்லாம் நல்லபடி நடக்கும் என்ற நம்பிக்கையை கைவிட முடியாது.
பெரும்பாலும் அப்படி நடக்கவும் செய்கிறது. எனது ஆர்வங்கள் மற்றும் அலைக்கழிப்புகளை இங்கு தொடர்ந்து பதிவு செய்ய விரும்புகிறேன், பார்க்கலாம்.
-
காற்றும் நீருமாக மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்கிறது. இங்கே சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது, சாலைகளின் குறுக்கே மரங்கள். வேறு பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் வீடியோக்கள் வாட்ஸப்பில் வருகின்றன. மின்சாரம் இரவே வெட்டுப்பட்டு விட்டது.
-
நான்கு நாட்களுக்கு முன் ஒரு நாள் மழை பெய்தது. நாள் முழுவதும் கூட அல்ல, மாலை துவங்கி ஒரு மூன்று மணி நேரம் வலுவாக இருந்தது.
அதற்குப் பின் எப்போதும் மழை, வெள்ளம் பேச்சுதான். வண்ண வண்ண வகையில் அலர்ட் தருகிறார்கள். இதுவரை அவ்வப்போது தூறல் மட்டும்தான். நாளை நெல்லூர் பக்கம் கரை கடக்கும் என்று செய்தி. என்ன நடக்கிறது பார்க்கலாம்.
இதுவரை தலைப்புச் செய்திகளுக்கு அப்பால் சொல்லிக் கொள்ள எதுவுமில்லை.
-
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இடைப்பட்ட காலத்தில் பதிவு செய்வதை நிறுத்தியிருந்தேன். இது யோசித்து எடுத்த முடிவல்ல. அப்ஸிடியன் என்ற மின்னும் பொருளால் கவரப்பட்டு வேறு திசைக்கு நகர்ந்து விட்டேன். ஆனால் பதிவு எழுதுவது, அதிலும் குறிப்பாக பெடிவர்ஸில் இணைக்கப்பட்ட இங்கு எழுதுவது எனக்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. தொடர்கிறேன்.
இனி வரும் நாட்கள் ஆரோக்கியமாகவும் மன நிறைவு அளிப்பதாகவும் வளம் சேர்ப்பதாகவும் அமைதி நிறுவுவதாகவும் இருக்க இந்த தீபாவளி நன்னாளில் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
-
குறிப்புகள் எடுத்துக் கொள்வதற்கான ஆப் இது. நாம் எழுதும் குறிப்புகள் தனித்தனி கோப்புகளாக மொபைல் அல்லது கணினியில் சேமிக்கப்படுவதால் அதை வர்ட், கூகுள் டாக் என்று பல வகைகளில் திறந்து திருத்த இயலும். இதுதான் அப்சிடியனை ஆதரிக்க முக்கிய காரணம்.
என்னை போன்றவர்கள் குறிப்புகளோ பதிவுகளோ எழுதி என்ன செய்யப் போகிறோம்? எனவே நான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து வைத்துக் கொள்ள மட்டுமே பெரும்பாலும் இதை பயன்படுத்துகிறேன். அவ்வப்போது எதாவது எழுதுவதும் உண்டு. ஆனால், சொன்னது போல் அதெல்லாம் பயன்படுவதில்லை.
ஹாஷ்டாக்குகள் வழியே ஆர்கனைஸ் செய்ய வேண்டும் என்பது பெரிய சவால். அதைக் கற்றுக் கொள்வதற்காகவே தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
புதிய மொபைலில் நான் நிறுவும் முதல் சில ஆப்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.